வைத்தியசாலைகளை தரம் உயர்த்தி தருமாறு கோரிக்கை!

திருகோணமலை மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை, மொறவெவ ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம் மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திரியாய் மத்திய மருந்தகம் போன்ற வைத்தியசாலைகளை தயமுயர்த்தி, ஊழியர்களை அதிகரித்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மொறவெவ பிரதேசத்தில் இரண்டு வைத்தியசாலைகளுக்கும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினூடாக சிறந்த வைத்தியர்களை நியமித்துள்ள போதிலும் மக்களுக்கு சேவை வழங்குவதற்கு வளங்கள் பற்றாக்குறையாக காணப்படுவதாகவும் தெரியவருகின்றது.

மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையாக சுகாதார திணைக்களம் பெயர்களை சூட்டியிருந்தும் அவ்வைத்தியசாலைக்கு சிசிச்சைக்காக செல்லும் நோயாளிகள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மழை நேரங்களில் நோயாளிகள், வௌிநோயாளர் பிரிவிலிருந்து நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் விடுதிக்குள் செல்வதற்கு மழையில் நனைந்தே செல்ல வேண்டியுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் வசதி கருதி வைத்தியசாலைக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, குச்சவெளி பிரதேசத்திலுள்ள திரியாய் மத்திய மருந்தகத்தை நம்பி பல நோயாளர்கள் வருகை தருவதாகவும், அவ்வைத்தியசாலையை தரம் உயர்த்தி தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன் வைத்தியசாலைகளை தயமுயர்த்துவது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் கூடிய கவனம் எடுக்க வேண்டுமெனவும் அப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Facebook Comments