பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பை மீளவலியுறுத்தும் படுகொலை!

இலங்கையில் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவேண்டும் என்பதை கதிர்காமத்தில் பொலிஸார் செயற்பட்ட விதம் மீளவும் நினைவுறுத்தியுள்ளது.

சனிக்கிழமை இரவு பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, கதிர்காமம் பொலிஸ் நிலையத்தின் முன் கூடிய மக்களால் அப்பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.

எனவே, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் 13 பெண்கள் உள்ளிட்ட 58 பேர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பொலிஸார் சட்டத்தின் ஆட்சிக்கு உட்படாது வரம்புமீறி அதிகார பலத்தைப் பயன்படுத்திய இவ்வாறான பல சம்பவங்கள் முன்னரும் பதிவாகியுள்ளன.

இதில் குறிப்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான பவுன்ராஜ் சுலக்ஷன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி குளப்பிட்டி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவமானது உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

சாதாரண பொதுமக்களுக்கு எதிராக வடக்கில் பாதுகாப்புத்தரப்பினர் அத்துமீறிச் செயற்படுகின்றபோது ஏதோ விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைப் போன்று அதனை நியாயப்படுத்தும் தென்னிலங்கை, தற்போது நிலைமையின் பாரதூரத்தன்மையை உணர்ந்து யதார்த்தத்தை விளங்கிக்கொள்வதற்கு இந்த துன்பியல் வழிசமைத்துள்ளது.

போர்க்காலகட்டத்தில் கட்டுக்கடங்காத அதிகாரங்களை பாதுகாப்புத்தரப்பினரின் கரங்களில் கொடுத்தமைக்கான எதிர்வினையே கதிர்காமத்திலும் குளத்தடியிலும் அரங்கேறியிருந்தது.

போர்க்காலத்தில்கூட சட்டத்தின் ஆட்சிக்கு இணங்கச் செயற்படவேண்டும் என்ற சர்வதேச நியதிக்கு முரணாக சட்டவிடுபாட்டுத்தன்மையுடன் நீதிக்குப் புறம்பாக செயற்பட்டதான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பாதுகாப்புத்தரப்பினருக்கு, போரில்லாத சாதாரண காலப்பகுதியில் எப்படி செயற்படுவது என்பது தெரியாமல் இருக்கின்றதா? என்பது மக்கள் முன்பாக உள்ள கேள்வியாகும்.

போர்க்காலத்து மனநிலையில் இருந்து மாற்றம் பெறுவதற்கு படைத்துறைக் கட்டமைப்பில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவிக்காலத்தை எப்படி நீடிப்பது, அதிகாரத்தை எப்படித் தக்கவைத்துக்கொள்வது, எப்படி அதிகாரத்தை அதிகரித்துக்கொள்வது என்பதிலே இந்நாட்டின் அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் போது தமது படைத்துறையினர் மீது கைவைத்து தமது செல்வாக்கை குறைத்துக்கொள்வார்களா?

“அரசியல்வாதி ஒருவன் அடுத்த தேர்தலில் எப்படி வெற்றிபெறலாம் எனப் பார்க்கிறான். மாறாக நாட்டுத்தலைவன் என்பவன் அடுத்த சந்ததியை எப்படி முன்னேற்றலாம் எனப் பார்க்கிறான்” என்ற புகழ்பெற்ற கூற்றுக்கு அமைவாக இந்த நாட்டிலுள்ள அரசியல் தலைவர்கள் அரசியல்வாதிகளாக சிந்திக்காது நாட்டுத்தலைவர்களாக சிந்திக்கும் போதே உண்மையான மறுசீரமைப்புக்கள் சாத்தியமாக முடியும்.

இலங்கையில் பாதுகாப்புத்துறையினர் மத்தியில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு போர்க்கால மனநிலையில் இருந்து மாற்றம் கொண்டுவருவதற்கு மட்டுமன்றி இராணுவமய நீக்கமானது விரைந்து முன்னெடுக்கப்படவேண்டும் என்பதை கதிர்காமத்தில் பொலிஸார் அரங்கேற்றியுள்ள நீதிக்குப்புறம்பான படுகொலையானது வலியுறுத்தி நிற்கின்றதென்பதில் கேள்விகளுக்கு இடமில்லை.

-நிதர்ஷனன்-

Facebook Comments