தீர்வு கிட்டும்வரை அரசுடன் இணையமாட்டோம்!

தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்வரை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் பெரும் குழப்பநிலை நிலவிவருகின்ற நிலையில், கூட்டமைப்பு, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமா என்ற ஊடகங்களின் விமர்சனம் குறித்து விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இருப்பினும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முற்போக்கான முறையில் நடவடிக்கை எடுக்கும் அரச தரப்பிற்கு, எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு தாம் ஆதரவு வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டின் பிரதான கட்சிகளை பின்தள்ளி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகத்தான வெற்றியை பதிவுசெய்யது.

இதனை தொடர்ந்து தேசிய அரசாங்கத்தில் பெரும் குழப்பநிலை தோற்றம் பெற்றுள்ள நிலையில், ஐ.தே.க. தனியாக ஆட்சியமைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

ஐ.தே.க. தனித்து ஆட்சியமைக்க இன்னும் எட்டு உறுப்பினர்கள் தேவையான நிலையில், கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ஐ.தே.க தரப்பு தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments