அரச சொத்துக்கள் தேர்தலுக்காக பயன்படுத்தப்படுகின்றது இளைஞர் அணி!

தேர்தல் சட்டத்திற்கு முரணாக ஆளும் தரப்பினர் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துகின்றார்கள்.இவ்விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உரிய கவனம் செலுத்த  வேண்டும் என பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி கோரிக்கை விடுத்தது. 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் அபிவிருத்திகளை விளம்பரப்படுத்துவதற்காக தேசிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.இவ்விடயம் தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர்  இந்திக அனுருத்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலித்தீன் மற்றும் பிளாஸடிக் அற்ற  பிரச்சார நிர்மாணிப்புக்களை செயற்படுத்தவே தீர்மானித்துள்ளோம்.சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக காணப்பட வேண்டும். தேர்தலின் வெற்றியை கருத்திற் கொண்டு ஆளும் தரப்பினர் தேர்தல் சட்டத்தை முறைக்கேடாக பயன்படுத்துகின்றார்கள். 

தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தங்களின் ஆதரவாளர்களுக்கு  அரச திணைக்களங்களில் முறையற்ற விதத்தில் நியமணங்களை பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.

மறுபுறம் பொருட்களின் அடிப்படையில்  சம்மானங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. ஆகவே இவ்விடயம் தொடர்பில்  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். 

Facebook Comments