ஹக்கீமை கட்சித் தலைமை பதவியிலிருந்து நீக்க வேண்டும்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் கட்சித் தலைமை பதவியிலிருந்து நீங்கினால் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆட்சியமைக்க உடன்படுவேன் என உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”தலைமை பதவியிலிருந்து ஹக்கீம் நீக்கப்படாத நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரவேண்டிவரும்.

எனது போராட்டம் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரானது அல்ல. அது ஹக்கீமின் தலைமைத்துவத்திற்கு எதிரானதே. இந்த போராட்டத்திலிருந்து ஒருபோதும் நான் சறுகிவிடப் போவதில்லை.

ஹக்கீம் என்ற தனி நபரின் அடாவடித்தனங்களை நான் ஏற்றுக்கொண்டு சென்றிருந்தால் மிக இலகுவாக அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குரிய தவிசாளர் பதவி எனக்கு கிடைத்திருக்கும்.

ஆனால் அவருக்கெதிராகவும், கட்சியை நம்பி வாக்களிக்கும் எமது மக்களை காப்பாற்றவேண்டும் என்பதற்காகவே நாங்கள் வெளியேறி பல போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.

நான் முஸ்லிம் காங்கிரஸ் என்ற அந்த கட்சிக்காகவே பாடுபடுவேன். அதனை தூய பாதைக்கு இட்டுச்செல்லும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” எனக் குறிப்பிட்டார்.

Facebook Comments