யோகங்களில் தனித்துவமான யோகம்.

யோகங்களில் தனித்துவமான யோகம்.

ஜாதகத்தில் ஒரு மனிதனின் செல்வ நிலையைப் பற்றி கூறும் யோகங்கள் பல இருக்கின்றன. செல்வத்தை விட, உயர்ந்த உணர்வுகளான மனிதனின் அன்பு, பாசம் ஆகியவை பற்றிக் கூறும் யோகங்கள் ஜோதிட ரீதியாக குறைவாகவே உள்ளன.

ஒரு மனிதனின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பிறர் மீது செலுத்தும் அன்பு, பாசம் பற்றி கூறுவது பாச யோகம் ஆகும்.

அதாவது, ஒருவரது பிறப்பு ஜாதகத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்களை தவிர்த்து மற்ற ஏழு கிரகங்களும், ஏதாவது ஐந்து இராசிகளில் அமர்ந்திருக்கும் நிலை பாச யோகத்தை உருவாக்குகிறது.

அரிதாக ஏற்படக்கூடிய யோகங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும். மற்றவர்களது பாசம் வேடமாக இருந்தாலும், இவர்கள் உண்மையான பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் சமமாக பழகும் தன்மை காரணமாக இந்த யோகம் பாச யோகம் என்று சொல்லப்படுகிறது. இந்த யோகம் கொண்ட குழந்தை பிறந்த வீட்டின் பொருளாதார நிலை படிப்படியாக உயரும்.

அவர்கள் ஒழுக்கமான குணங்களை கொண்டவர்களாகவும், கல்வி மான்களாகவும் இருப்பார்கள். பேச்சாற்றல் மிக்கவர்களாகவும், தொழில் மற்றும் வியாபாரங்களில் வெற்றிகளை பெறுபவர்களாகவும் இருப்பார்கள்.

தெய்வ பக்தி அதிகம் என்பதால், கோயில் சம்பந்தமான காரியங்களை முன்னின்று நடத்துவது, அதற்கு பெருந்தொகைகளை தானமாக அளிப்பது ஆகியவற்றில் ஆர்வம் காட்டுவார்கள். இட்ட பணிகளை தட்டாமல் செய்யக்கூடிய வேலையாட்கள் இவர்களுக்கு இருப்பார்கள்.

பொதுவாக, இந்த யோகத்தினர் பரம்பரை சொத்துக்கள் அதிகம் உள்ள குடும்பத்திலும், பரம்பரை பணக்காரர்கள், கோடீஸ்வரர்கள் என்கிற பெயர் பெற்ற வம்சங்களிலும் பிறப்பார்கள் என்று ஜோதிட குறிப்புகள் கூறுகின்றன.

Facebook Comments