பொள்ளாச்சி மாணவி கொலை விவகாரம்: இளைஞன் கைது!

பொள்ளாச்சி மாணவி கொலை விவகாரம்: இளைஞன் கைது!

பொள்ளாச்சி, தாராபுரம் பகுதியில் மாணவியொருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணையை துரிதப்படுத்துவதற்கு 3 தனிப்படைகளை அமைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல், ராகவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயியான வெள்ளைச்சாமியின் மகளான பிரகதி, கொலை செய்யப்பட்ட நிலையில் (சனிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி கோவையிலுள்ள தனியார் கல்லுரியொன்றில் கல்வி கற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான கடந்த வெள்ளிக்கிழமையன்று கல்லூரி நிறைவு பெற்றவுடன் வீட்டுக்கு திரும்பிகொண்டு இருப்பதாக தொலைபேசியூடாக தனது பெற்றோருக்கு மாணவி அறிவித்துள்ளார்.

இருப்பினும் மாணவி, குறிப்பிட்ட நேரத்துக்கு வீட்டுக்கு வருகை தராதமையால், பெற்றோர்கள் அவரது தொலைபேசிக்கு தொடர்பினை ஏற்படுத்தியபோது அது இயங்கவில்லை. இதனால் இவ்விடயம் குறித்து ஒட்டன்சத்திரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்தபோது, பொள்ளாச்சி, பூசாரிப்பட்டி சாலையோரத்திலுள்ள முள்புதரில் குறித்த மாணவியின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்து பொலிஸார், மாணவியின் சடலத்தை கண்டெடுத்து வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் கோவை ஆவாரம்பாளையத்திலுள்ள பெற்றோல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பொலிஸார் ஆய்வு செய்துள்ளனர். அதில் 2 பேர், காரில் மாணவியை கடத்தி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவர்கள் குறித்த விவரங்களை பொலிஸார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குறித்த விசாரணையில், கல்லூரி மாணவி பிரகதியை ஒரு தலையாக காதலித்து வந்த 2 பேர் தான் இந்த படுகொலையை செய்திருக்க வேண்டுமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்த மாணவிக்கு திருமணம் நடத்துவதற்கும் ஏற்பாடுகள் முன்னெடுத்திருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவெளை, பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டி பாலியல்பலாத்காரம் செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி, தாராபுரம் பகுதியில் மாணவியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தினை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரை தனிப்படை பொலிஸார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய சிலரையும் விரைவில் கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments