பேரறிவாளன் உட்பட்ட 7 பேரையும் மன்னித்து விட்டோம்!

பேரறிவாளன் உட்பட்ட 7 பேரையும் மன்னித்து விட்டோம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்று வரும் 7 பேரையும் மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும், 7 பேர் மீதும் எந்தவிதமான வெறுப்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று (புதன்கிழமை) தமிழகம் வந்துள்ள இவர், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளிடத்தில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பிரசார தொடக்கப் பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் நேற்று இடம்பெற்றது.

இப்பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தி மாணவிகளுக்கு மத்தியில் உரையாடினார்.

இதன்போது மாணவியொருவர் ராகுல் காந்தியிடம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலைக்கான நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, கடந்த 1991 ஆம் ஆண்டு என்னுடைய தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி இரு நோக்கத்துக்காக கொல்லப்பட்டார் என்று தெரிவித்தார்.

அந்தவகையில், முதலாவது தனிப்பட்ட காரணங்களுக்கானது என்றும் அதை இப்போதும் சந்தித்து வருகிறோம் என்றும் சுட்டிக்காட்டிய அவர், இரண்டாவது சட்டரீதியானது என்றும் தெரிவித்தார்.

மேலும், குற்றவாளிகள் 7 பேரையும் தாங்கள் முழுமையாக மன்னித்துவிட்டதாகவும், எந்தவிதமான வெறுப்பும், விரோதமும் யார் மீதும் இல்லை என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

அத்தோடு, அவர்கள் விடுதலை குறித்து நீதிமன்றம் முடிவு செய்யட்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவது அவசியம். அதுதான் சிறந்தது எனவும் அவர் கூறினார்.

Facebook Comments