புலம்பெயர் தமிழர்கள் லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்!

இலங்கையின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட இலங்கை இன்று 71 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்ற நிலையில் இதனை தமிழர்களின் கரி நாளாக அனுஷ்டித்து இன அழிவுக்கும், பேரினவாதத்துக்கும், எதிராக அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தூதரகத்தின் முன் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்பாட்டம் கடும் குளிரையும் பொருட்படுத்தாது பெருமளவிலானோர், ஒன்று திரண்டு பறை, இசை, முழக்கங்களும், தேசியக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறும் இலங்கை அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த ஆண்டு சுதந்திர தின சம்பவத்தை அடுத்து இம்முறை குறித்த பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2018) இதே நாளில் சுதந்திர தினத்தின ஆர்ப்பாட்டத்தின் போது அப்போதைய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பிரியங்க பெர்ணான்டோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பார்த்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வழக்கும் தற்போது வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

Facebook Comments