பந்துகள் தாக்கியும் பெய்ல்ஸ் விழாத மர்மம் என்ன ?

பந்துகள் தாக்கியும் பெய்ல்ஸ் விழாத மர்மம் என்ன ?

ஐ.சி.சி.யின் 12 ஆவது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பயன்படுத்தப்படும் எல்.ஈ.டி. விக்கெட் (ஸ்டம்ப்ஸ்) பெய்ல்ஸ் தொடர்பில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரின் 14 போட்டிகளில் 5 போட்டியில் பந்து வீச்சாளர்கள் வீசிய பந்து ஸ்டம்ப்ஸை தாக்கியும் பெய்ல்ஸ் கீழே விழவில்லை என வீரர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

* இந்தியா – அவுஸ்திரேலியா

லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற 14 ஆவது போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடும்போது பும்ரா வீசிய பந்து வோர்னரின் துடுப்பாட்ட மாட்டையில் பட்டு ஸ்டம்பை தாக்கியது. எனினும் இதன்போது பெய்ல்ஸ் கீழே விழவில்லை.

* இங்கிலாந்து – பங்களாதேஷ்

கார்டீப் மைதானத்தில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற 12 ஆவது போட்டியில் இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகள் மோதின. இப் போட்டியில் பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடும்போது பென்ஸ்டோக் வீசிய பந்து மொஹமட் சைபுடினின் உடலில் பட்டு விக்கெட்டை தாக்கியது. எனினும் பெய்ல்ஸ் கீழே விழவில்லை. இதனால் விக்கெட் காப்பில் ஈடுபட்ட இங்கிலாந்து அணியின் பெயர்ஸ்டோ பந்தை விக்கெட்டில் உரசி பரிசோதித்துப் பார்த்தார்.

* அவுஸ்திரேலியா – மேற்கிந்தியத்தீவுகள்

நொட்டிங்கமில் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற 10 ஆவது போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள், அவுஸ்திரேலிய அணிகள் மோதின. இப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் துடுப்பெடுத்தாடும்போது மிட்செல் ஸ்டாக்கின் வீசிய பந்து ஸ்டம்பை மெதுவாக உரசிக் கொண்டு போனது. இதன்போதும் பெய்ல்ஸ் கீழே விழவில்லை.

* நியூஸிலாந்து – இலங்கை

கார்டீப்பில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன துடுப்பெடுத்தாடும்போது டிரெண்ட் போல்ட் வீசிய பந்து ஸ்டம்பை உரசிக் கொண்டுபோனது, எனினும் பெய்ல்ஸ் கீழே விழவில்லை.

* இங்கிலாந்து – தென்னாபிரிக்கா

லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் மோதின. இப் போட்டியில் டீகொக் துடுப்பெடுத்தாடும்போது அடில் ரஷீத் வீசிய பந்து ஸ்டம்பை மொதுவாக தாக்கி விட்டு சென்றது எனினும் இதன்போது பெய்ல்ஸ் கீழே விழவில்லை.

இவ்வாறு ஐந்து போட்டிகளிலும் பந்து ஸ்டம்ப்பை தாக்கியும் பெய்ல்ஸ் கீழே விழாததன் மர்மம் அறியாது தற்போது வீரர்கள் மத்தியில் சர்ச‍ை எழுந்துள்ளது.

Facebook Comments