நான் ஒன்றும் தொழில்நுட்பத்தை அறியாதவன் அல்ல!

நான் ஒன்றும் தொழில்நுட்பத்தை அறியாதவன் அல்ல!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அவுஸ்ரேலியா அணிக்கெதிரான போட்டியில், நடுவர்களின் தீர்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் கார்லோஸ் பிரத்வெயிட் விமர்சித்துள்ளார்.

நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) ட்ரென்ட் பிரிஜ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடும் போது, அவுஸ்ரேலியா அணியின் பந்து வீச்சாளர்களால் கோரப்பட்ட பல ஆட்டமிழப்புகளுக்கு நடுவர்கள் சாதகமான தீர்ப்பினையே வழங்கியிருந்தார்கள்.

எனினும், அதனை மீள் பரீசீலனை செய்து பார்க்கும் போது, அது ஆட்டமிழப்பு இல்லை என தெளிவாக தெரிந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள், கடும் அதிருப்தியடைந்தனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் கார்லோஸ் பிரத்வெயிட் கருத்து தெரிவிக்கையில்,

‘இதை சொல்வதால் எனக்கு அபராதம் விதிக்கப்படுமா என்பது தெரியாது. ஆனால் நடுவர்களின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது.

நாங்கள் எங்களுக்குரிய டி.ஆர்.எஸ். வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஏனெனில் ஒவ்வொரு முறையும் எங்களது கால்கவச மட்டையில் பந்து படும்போதெல்லாம் ஆட்டமிழப்பு என்று நடுவர் விரலை உயர்த்துகிறார்.

ஆனால் அவுஸ்ரேலியா துடுப்பாட்டத்தின் போது அவர்களது கால்கவச மட்டையில் பந்து படும்போது எல்.பி.டபிள்யூ. கேட்டு முறையிட்டால் நடுவர் கையை தொங்கப் போட்டு விடுகிறார்.

அதற்கு நாங்கள் டி.ஆர்.எஸ். வாய்ப்பை பயன்படுத்தி எப்போது மீள் பரீசிலனை செய்து பார்த்தாலும் பந்து விக்கெட்டை விட்டு விலகிச்செல்கிறது.

அதே சமயம் நாங்கள் துடுப்பெடுத்தாடும் போது இதைச் செய்தால் பந்து விக்கெட்டை தாக்குகிறது. நான் ஒன்றும் தொழில்நுட்பத்தை அறியாதவன் அல்ல. ஆனாலும் இது ஏன் நடக்கிறது என்பது புரியவில்லை.

இந்த போட்டியில் மட்டுமல்ல, சில ஆண்டுகளாகவே இது போன்ற பிரச்சனைகளை பார்த்து வருகிறேன்’ என கூறினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலியா அணி 15 ஓட்டங்களால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments