தென்கொரியக் கடலில் விபத்து! 8 பேர் உயிரிழப்பு!

தென்கொரியாவில் மீன்பிடிப் படகொன்றும் கப்பலொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், 8 பேர் உயிரிழந்துள்ளதாக, கரையோரக் காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இரண்டு பேர் நீரில் மூழ்கிக் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.

தென்கொரியத் தலைநகரான சியோலை அண்டி அமைந்துள்ள கடற்பரப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

இரண்டு மாலுமிகள் மற்றும் 20 பயணிகளுடன் பயணித்த படகு, எரிபொருள் கொண்டுசென்ற கப்பலொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து, மேற்படி படகு நீரில் மூழ்கியுள்ளதாகவும், கரையோரக் காவல் பிரிவினர் கூறியுள்ளனர்.

மீட்புப் பணி நடவடிக்கைக்காக, 5 ஹெலிகொப்டர்களும் 19 கப்பல்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையெனவும், கரையோரக் காவல் பிரிவினர் கூறியுள்ளனர்.

இந்த விபத்துத் தொடர்பாக கேள்வியுற்று தேசிய அவசரசேவை முகாமைத்துவ நிலையத்துக்குச் சென்ற தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்குப் பணித்துள்ளதாக, ஜனாதிபதி அலுவலகம் கூறியுள்ளது.

Facebook Comments