தலைமைப் போட்டியில் வெற்றிபெற்ற பொரிஸ் ஜோன்சன் பிரதமராகிறார்!

கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் வெற்றிபெற்ற பொரிஸ் ஜோன்சன் பிரித்தானியாவின் புதிய பிரதமராகத் தெரிவாகியுள்ளார்.

கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஜெரமி ஹன்ட் இருவரும் போட்டியிட்டனர்.

கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினர்களின் வாக்குப்பதிவில் பொரிஸ் ஜோன்சன் 92,153 வாக்குகளைப் பெற்று புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெரமி ஹண்ட் 46,656 வாக்குகளைப் பெற்றார்.

பொரிஸ் ஜோன்சனுக்கு 66% வாக்குகள்கிடைத்துள்ளன. ஜெரமி ஹண்ட்டுக்கு 34% வாக்குகள் கிடைத்துள்ளன.

வெற்றிபெற்ற தலைமைப் போட்டியாளர் பொரிஸ் ஜோன்சன் நாளை புதன்கிழமை உத்தியோகபூர்வமாக பிரதமராகப் பதவியேற்பார்.

லண்டன் முன்னாள் மேயரும், முன்னாள் வெளிவிகார அமைச்சருமான பொரிஸ் ஜோன்சன் பிரதமராகப் பதவியேற்கும் நிலையில் பல சிரேஷ்ட அமைச்சர்கள் அவருக்குக் கீழ் பணியாற்ற விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.

பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்த தெரேசா மே, தனது கடைசி அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கவுள்ளார்.

மேலும் பிரதமருக்கான இறுதிநேரக் கேள்விகளில் பங்கேற்ற பின்னர் நாளை புதன்கிழமை பிற்பகல் பக்கிங்ஹம் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் தனது பதவிவிலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாகக் கையளிப்பார்.

Facebook Comments