தமிழர் அரசியலில் பரபரப்பூட்டும் பிளவுகளும்! கூட்டுக்களும்!

தமிழ் மக்கள் கடந்த எட்டு ஆண்டுகளில் கண்டிராத அரசியல் கோமாளித் தனங்களை இப்போது காண்கின்றார்கள்.

உள்ளுராட்சித் தேர்தல் அறிவிக்கப்படும்வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏகபோகத் தலைமை என்று கூறிக்கொண்டு இருந்தவர்கள் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்து இருக்க முடியாது என்று வெளியேறுகின்றார்கள்.

தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட செயற்பாடுகளும்,கூட்டுப்பொறுப்புக்கு எதிரான போக்குகளும் பங்காளிக் கட்சிகளின் தனித்துவத்தையும், தன்மானத்தையும் கேள்விக்குட்படுத்துவதாக உள்ளது என்றும்,பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடி பொது அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்ளாமலும், தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வழங்கிய ஆனையை மீறியும் தமிழரசுக் கட்சியின் தலைமைகள் செயற்படுகின்றன என்றும் கூறிக்கொண்டு முதலில் ஈ.பி.ஆர்.எல்.எ.ப் இயக்கம் வெளியேறியது.

ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் வெளியேற்றத்துடன் விரைவில் புளொட், ரெலோ ஆகிய இயக்கங்களும் வெளியேறும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்தது.

அத்தகைய வெளியேற்றம் தேர்தலுக்கு பின்னரே நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும்,தேர்தலுக்கு முன்னரே பிரதேச சபைகளுக்கான ஆசனப்பங்கீடுகள் தொடர்பில் முரண்பட்டுக்கொண்டு ரெலோ இயக்கம் வெளியேறி இருப்பது அதிர்ச்சியளிப்பதாகவே அமைந்தது.

ரெலோ இயக்கத்திற்கும், புளொட் இயக்கத்திற்கும் வடக்கு கிழக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளை பங்கிட்டுக்கொள்வதில்,தமிழரசுக்கட்சி பிடிவாதமாகவும், விட்டுக்கொடுப்புக்கு இடம் கொடுக்காமலும் இருந்ததால் தாம் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியாது என்று ரெலே இயக்கம் வெளியேறியுள்ள நிலையில், புளொட் இயக்கமும் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ரெலோ இயக்கத்தின் வெளியேற்றங்களைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது தமிழரசுக் கட்சியின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

புளொட் இயக்கம் தொடர்ந்து இருப்பதும், வெளியேறுவதும் பொருட்டுக்குரிய விடயமல்ல என்பதே தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடாக இருக்கின்றது.

ஆகவே இனியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான அங்கீகாரத்தை அந்தப் பெயர் பெற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குரியாகியுள்ளது.

அதற்குக் காரணம்,தமிழரசுக் கட்சி தனி ஆளுமையோடு தன்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாககூறிக்கொண்டு தமிழ் மக்களிடம் செல்வதற்கு முடியாது.

ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ் மக்கள் அதிருப்தியிலும், வெறுப்பிலும் இருக்கின்றார்கள் என்ற கருத்து நிலை பரவலாக இருந்து வருவதால்,மீண்டுமொரு தேர்தலில் தமிழ் மக்களை எவ்வாறு கூட்டமைப்புக்கு வாக்களிக்கச் செய்வது என்று கூட்டில் இருந்தவர்கள் சிந்தித்துக்கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் கூட்டமைப்பிலிருந்து இரண்டு பிரதான கட்சிகள் வெளியேறியுள்ள நிலையிலும்,தமிழரசுக் கட்சி தனித்து மக்களைச் சந்திப்பதில் ஏற்படக்கூடிய சவால்கள் எவ்வாறாக இருக்கும் என்பது தொடர்பிலும் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் களம் பல சுவாரஸ்யங்களை கொண்டிருக்கப் போகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணக்கம் ஒன்றைக் கண்டு புதிய தேர்தல் கூட்டணி ஒன்றை ஏற்படுத்தியிருப்பதும் திடீர் நிகழ்வாகவே இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான தீவிரத் தமிழ்த் தேசிய அணியானது,கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும், சுரேஸ்பிரேமச்சந்திரனையும் தலைமைகளாகக் கொண்டதாகவே அமையும் என்றும்,அதில் வட மாகாண முதலமைச்சரும் காலப்போக்கில் இணைந்து கொள்வார் என்றும் எதிர் பார்க்கப்பட்டது.

விக்கிணேஸ்வரன் தனக்கான கட்சிப் பின்புலத்தைக் கொண்டிருக்காதவர் என்பதாலும், 2018ஆண்டு செப்ரெம்பர் மாதம் வடக்கு மாகாணசபை கலைக்கப்பட்ட பின்னர் அவர் வடக்கு அரசியலில் சவால்களை எதிர்கொண்டு நிலைத்து நிற்கமாட்டார் என்பதாலும் அவர் சறுக்கலான போக்கையே கடைப்பிடித்துக் கொண்டு இருக்கின்றார்.

ஆகையால் திடீர் திருப்பங்களும், பரபரப்புக்களுமாக மாறிக்கொண்டு இருக்கும் தமிழர் அரசியல் தளத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்கிணேஸ்வரன் கவனத்தை பெறாதவராகவே போய்விட்டார்.

அவர் வாரத்தில் இரண்டு அறிக்கைகளை விடுவதோடு தனது இருப்பை தானே முடக்கிக்கொண்டுவிட்டார். எனவே மாற்றுத் தலைமைக்கான விவாதத்திலோ,தீவிர அரசியல் விவாதத்திலோ விக்கிணேஸ்வரன் இனிமேல் முதன்மைப் படுத்தப்பட மாட்டார்.

தேர்தலில் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணமுடியாமல் போனதால்,கஜேந்திரன் குமார் பொன்னம்பலமும், சுரேஸ்பிரேமச்சந்திரனும் பிரிந்து தனி வழியில் போவதாக எடுத்துக்கொண்டி முடிவும் யாரும் எதிர்பாராததுதான்.

ஆகவே கூட்டமைப்புக்கு மாற்றான தலைமை அல்லது அணி ஒன்றின் தேவை ஒன்றுக்கான தேடலும் விவாதங்களும் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலுடன் நீர்த்துப்போய்விடும்.

தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு பலமான எதிரணிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆனந்தசங்கரி தலைமையிலான அணியும், கஜேந்திரகுமார் தலைமையிலான அணியும்,ரெலோ மற்றும் புளொட் இயக்கங்களும்,கூட்டமைப்புக்கு எதிராக அல்லது கூட்டமைப்பின் வெற்றியை தடுத்து நிறுத்துவதற்காக பலவந்தமாக களம் இறக்கப்பட்டிருக்கும் சுயேற்சைக் குழுக்களும் பலமான போட்டியாக அமையும்.

இதற்கிடையே கடந்த எட்டு வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதாகன எதிர்த் தரப்பாக இருந்துவந்த ஈ.பி.டி.பி கூட்டமைப்பின் பிளவு மற்றும் புதிய கட்சிகள், கூட்டுகக்ளின் தோற்றம் என்பவை தொடர்பில் எதுவிதமான கருத்துகக்ளையும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.

ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 1998ஆம் ஆண்டு கூறியதே தற்போதும் நிலைப்பாடாகும். தமிழ் மக்கள் மத்தியில் பல கருத்துக் கொண்டவர்கள் அரசியலில் ஈடுபடலாம்.

அவர்களில் யார் மக்களுக்கு சேவை செய்வார்கள் என்பதையும், கடந்த காலத்தில் யார்? கிடைக்கப்பெற்ற அதிகாரத்தைக் கொண்டு மக்களுக்கு சேவை செய்தவர்கள் என்பதையும் மனதில் கொண்டு தமிழ் மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துவருகின்றார்.

மறுபக்கத்தில் தேசிய கட்சிகளின் ஆர்வமும் முன்னரைவிடவும் அதிகமாவே இருக்கின்றது. தமிழ் கட்சிகளிடையே முரண்பாடுகளும், பிளவுகளும், அதிகரித்து குழம்பிப்போயுள்ள நிலையில் தாமும் வேட்பாளர்களை கண்டுபிடித்து போட்டியிட்டு குறிப்பாக வடக்கில் மாவட்டங்களில் குறைந்தது ஒவ்வொரு சபைகளையாவது கைப்பற்ற வேண்டும் என்றும், அதைக் கொண்டு வடக்கில் தமக்கு செல்வாக்கு இருக்கின்றது என்ற செய்தியை வெளியுலகுக்கு காட்ட வேண்டும் என்றும் சிந்திக்கின்றன.

இந்த வேட்டையில் ஈடுபடுவதற்கான கைக்கூலிகளுக்கு வாகன ஏற்பாடுகளையும்,தலா ஒருவருக்கு பத்து லட்சம் ரூபாய்களும் கொழும்பிலிருந்து வழங்கி மகிழ்வித்து அனுப்பியிருப்பதாகவும்,அவர்கள் கிராமங்கள் தோறும் சென்று ஆண் வேட்பாளர்களுக்கும்,விஷேடமாக பெண்வேட்பாளர்களுக்கும் பணம் தருகின்றோம் வேட்பாளர்காளக வாருங்கள் என்று கேட்டு வீடு வீடாகத் திரிகின்றார்கள் என்று தெரியவருகின்றது.

இன்று திடீர் வேட்பாளர்களாக மாறியிரக்கும் பலர் நேற்றுவரை எந்தக் கட்சி என்பது தெரியாதவர்களாகவும்,தற்போது சேர்ந்திருக்கும் கட்சியின் கொள்கை என்னவென்பதை அறியாதவர்களாகவும்,தேர்தலுக்குப் பின்னர் அரசியல் களம் எவ்வாறு அமையும் என்ற தூர நோக்கம் இல்லாதவர்களாகவும் இவர்கள் இருப்பதால் எந்தளவுக்கு இவர்களை தமது சேவகர்களாகக் கருதி மக்கள் வாக்களிப்பார்கள்?

தேர்தல் களத்தில் பல கட்சிகள் பல வேட்பாளர்கள் என்று குழப்பங்கள் அதிகரிப்பதால் வாக்குகளை சிதறடிக்கவும்,மக்களை குழப்பத்திற்குள் தள்ளிவிடவுமே இந்த முயற்சிகள் உதவும்.தேர்தலுக்கு முன்னர் மிகுந்த பரபரப்புடன் நடக்கும் கூட்டுக்களும், தனித் ஓட்டங்களும் ஆரம்பம்தான், தேர்தலுக்குப் பின்னர் நடக்கப்போகும் கட்சி தாவல்களும்,குத்துக்கரணங்களுமே இந்த பரபரப்புக்களின் முடிவாக இருக்கப்போகின்றது.

-ஈழத்துக் கதிரவன்-

Facebook Comments