சினிமாவில் பதவி வகிப்பவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது!

தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பதவியில் இருப்பவர்கள் அரசியலில் ஈடுபடுவது சினிமாவிற்கு ஆரோக்கியமாக இருக்காது என நடிகரும் இயக்குநருமான ரி.ஆர்.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக, தயாரிப்பாளர் சேரன் தலைமையில் இடம்பெற்ற போராட்டத்திற்கு ரி.ஆர்.ராஜேந்தர் ஆதரவு வழங்கியுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) மாலை 5.30 மணியளவில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்ற ரி. ராஜேந்தர், அங்கு சேரனுக்கு ஆதரவு வழங்கும் முகமாக செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.

இதன் போது கூறிய அவர்,

“அரசியலுக்கு யார் வேண்டுமெனினும் வரலாம். ஆனால் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும். இந்த தேர்தலில் விஷால் போட்டியிட்டால் தயாரிப்பாளர்களுக்கு எப்படி மானியம் கிடைக்கும். ஒரு சங்கத்திற்கு தலைவராக இருப்பவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது.

அவ்வாறு போட்டியிடுவதன் மூலம் சினிமாவிற்குள் தேவைற்ற குழப்பங்களையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும்” என்று தெரிவித்தார்.

எவ்வாறெனினும், விஷாலின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டத்தை தொடர்ந்து, சேரனினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த போராட்டமும் மீளப்பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments