சர்வதேசத்தின் ஆதரவையும் தக்கவைத்துக்கொண்டே செயற்படுவோம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடானது, சர்வதேசத்தின் ஆதரவையும் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலேயே அமையுமென அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தின் மீதும் தற்போதைய அரசாங்கத்தின் மீதும் சர்வதேச அழுத்தம் ஏற்பட, தமிழ் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று குறிப்பிட்ட சுமந்திரன், இலங்கை அரசாங்கத்தை தப்பிக்க வைக்கின்ற செயற்பாட்டில் கூட்டமைப்பு ஈடுபட்டதென யாராலும் கூறமுடியாதென குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதாக இலங்கை அரசாங்கம் கூறிய பின்னர் சர்வதேச அழுத்தம் குறைவடைந்து அரசாங்கத்தை உற்சாகப்படுத்துவதாகவும், கூட்டமைப்பும் அதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

எனினும், அரசாங்கத்தின் சகல செயற்பாடுகளையும் எதிர்க்க வேண்டுமென கூறுபவர்களின் நியாயத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்ட சுமந்திரன், முன்னேற்றகரமான விடயங்களுக்கு ஆதரவளிப்பது அவசியம் எனக் குறிப்பிட்டார்.

அதே சந்தர்ப்பத்தில், வாக்குறுதி வழங்கியமைக்கு ஏற்றவாறு செயற்படாமல் காலத்தை கடத்தினால் அவ்வாறான சந்தர்ப்பத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டிய கடமையும் கூட்டமைப்பிற்கு உண்டு எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பு தொடர்பில், முன்னேற்றகரமான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments