கொரில்லா – திரைவிமர்சனம்

நாயகன் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகிய 3 பேரும் நல்ல நண்பர்கள். இவர்களுடன் குரங்கும் இருக்கிறது. நாயகன் ஜீவா சிறு சிறு திருட்டு வேலைகளைச் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

அவருடன் வேலையிழந்த சதீஷ், நடிகராக வேண்டும் என்று இருக்கும் விவேக் பிரசன்னா ஆகியோரும் உள்ளனர். இவர்கள் இருக்கும் வீட்டிற்கு கீழே மதன் குமார் குடியேறுகிறார்.

ஊரில் விவசாயம் செய்ய முடியாத விரக்தியில் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள முயலும் மதன் குமாரை நண்பர் ஒருவர் காப்பாற்றி, சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். விவசாயம் அழிந்து கொண்டு வருகிறதே என்று மிகுந்த வருத்தத்தோடு இருக்கும் இவர், பணம் சம்பாதிக்க வழி தேடிக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் நால்வருக்கும் பணத்தேவை அதிகரிக்கிறது. இதனால் ஒரு கட்டத்தில் 4 பேரும் குரங்குடன் சேர்ந்து வங்கியை கொள்ளையடிக்க முடிவு செய்கிறார்கள். இதற்கு உண்டான திட்டங்கள் தீட்டி வங்கியில் கொள்ளை அடிக்க செல்கிறார்கள்.

கொள்ளையடித்துவிட்டு திரும்பும் போது இவர்களுடன் வந்த குரங்கு அபாய பட்டனை அழுத்தி விடுகிறது. போலீஸ் அவர்களை சுற்றிவளைக்கிறது. இவர்கள் போலீசிடம் இருந்து தப்பித்தார்களா? பணத்தை கொள்ளையடித்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் ஜீவா மிகவும் துடிதுடிப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மீண்டும் பழைய ஜீவாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது.

சதீஷ், விவேக் பிரசன்னா, விவசாயியாக வரும் மதன்குமார் என அனைவரும் அவர்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள் நாயகி ஷாலினி பாண்டேவிற்கு படத்தில் பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

நகைச்சுவை படம் என்றாலும், விவசாயிகளின் பிரச்சனைகளை வைத்து திரைக்கதை அமைத்து நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குநர் டான் சான்டி.

ராதாரவி, யோகிபாபு படத்தின் பிற்பாதியில் வந்தாலும், காமெடியால் அனைவரையும் கவர்கின்றனர். படம் ஜாலியாக சென்றாலும் அதில் விவசாய கடன் ரத்து குறித்து பேசிய விதம் நன்றாக இருந்தது.

குருதேவின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ். பின்னணி இசையும் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. இருப்பினும் பாடல்கள் சுமார் ரகம் தான். ரூபனின் எடிட்டிங்கில் நேர்த்தி தெரிகிறது.

மொத்தத்தில் ´கொரில்லா´ நகைச்சுவை விருந்து.

Facebook Comments