கைதாகியுள்ள மென்பொறியியலாளர் குறித்து அம்பலமாகும் திடுக்கிடும் தகவல்கள்!

கைதாகியுள்ள மென்பொறியியலாளர் குறித்து அம்பலமாகும் திடுக்கிடும் தகவல்கள்!

ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு முக்கிய உதவிகளை வழங்கினார் என சந்தேகிக்கப்படும் இலங்கையின் மென்பொருள் பொறியியலாளரை இந்தியா மூன்று வருடங்களாக கண்காணித்து வந்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ். அமைப்புடன் குறிப்பிட்ட இளைஞனுக்கு உள்ள தொடர்பு குறித்து இந்தியா கண்காணித்து வந்தது என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் தாக்குதல்களை மேற்கொண்ட குழுக்களிற்கு மத்தியிலான தொடர்பாளராக 24 வயதுடைய ஆதில் அனீஸ் செயற்பட்டு வந்தார் என சந்தேகிப்பதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மென்பொறியியலாளர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். எனினும் இது குறித்த தகவல்களை இலங்கை அதிகாரிகள் பகிரங்கப்படுத்தவில்லை என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

எனினும் இலங்கையின் பொலிஸ் பேச்சாளர் இதனை உறுதிசெய்துள்ளார். ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார் எனவும் ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

எனினும் அவர் மேலதிக தகவல்களை வழங்க மறுத்துள்ளார்.

இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவரும் குஜராத்தை சேர்ந்த அதிகாரியொருவரும் இந்த இளைஞன் குறித்து இலங்கைக்கு தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் அரசியல் பயின்று, பின்னர் கணினித்துறையில் பட்டமேற்படிப்பை பூர்த்தி செய்தவர் என ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் அவசரகால சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள இவர், சட்டத்தரணியொருவரின் உதவியை பெறமுடியாது என்பதால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

2006முதல் இவரை கண்காணித்து வந்துள்ளோம் என தெரிவித்துள்ள இந்திய புலனாய்வுப் பிரிவினர், இவர் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர் என இந்திய நீதிமன்றில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த இளைஞன் குறித்து இந்தியா இலங்கைக்கு தகவல்களை வழங்கியதா என்பதை உறுதிசெய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

இந்தியா குறிப்பிட்ட மென்பொறியியலாளருக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்த பின்னரும் அவரைக் கண்காணிப்பின் கீழ் வைத்திருந்ததா என்பதை இந்திய அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துள்ளனர்.

இதேவேளை, ஆதில் தேசிய தவ்ஹீத் ஜமாத்திற்கும் ஜமாதி மிலாத் இப்ராஹிம் என்ற அமைப்பிற்கும் இடையிலான தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுத்தார் என இலங்கையின் சி.ஐ.டி.யினரும் படைத்தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

இரு தரப்பினரும் ரோக் வெப்பினையும் வட்ஸ் அப்பினையும் பயன்படுத்தியுள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் ஆதில் குண்டுத் தாக்குதல்களுக்கு உதவினாரா அல்லது தாக்குதல்களை திட்டமிட்டு வழிநடத்தியவர்களில் ஒருவரா என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் வேர்த்துசா அலுவலகத்தில் சோதனையிட்ட பொலிஸார் அங்கு பணியாற்றும் ஒருவரை கைதுசெய்துள்ளனர். ஆதில் 2013 இல் அங்கு பணியாற்றியவர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையர் ஒருவருக்கும் இந்தியர்கள் இருவரிக்கும் இடையிலான இணைய உரையாடல்கள் 2016இல் ஆரம்பித்து 2017வரை நீடித்தமையை உறுதிசெய்யும் நீதிமன்ற ஆவணங்களை பார்வையிட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரொய்ட்டர்ஸ், இந்தியர்கள் இருவரும் கைதுசெய்யப்படும் வரை இந்த உரையாடல்கள் இடம்பெற்றன எனவும் குறிப்பிட்டுள்ளது.

எக்ஸ் என தன்னை அழைத்துகொள்ளும் ஆதில், இலங்கையில் பெரும்பான்மை இனத்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அநீதிகள் குறித்து அறிந்துள்ளீர்களா என இந்தியர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

அதன்பின்னர் அவர் தனது அனுபவங்கள் குறித்து தெரிவித்துள்ளார். தான் சிறையிலிருந்தது அங்கு தாக்கப்பட்டது போன்ற அனுபவங்களை விபரித்துள்ளமை நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தான் பத்திரிகையாளர் எனவும் கலாநிதி பட்டம் பெற்றவர் எனவும் சில இடங்களில் அவர் குறிப்பிட்டுள்ளமை பொய் என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் தனது வீட்டிலிருந்து செயற்பட்டார் எனவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் முக்கிய பங்காற்றினார் எனவும் தொழில்நுட்ப மற்றும் பயிற்சிகளில் முக்கிய பங்களிப்பை வழங்கினார் எனவும் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரே தாக்குதல்களை மேற்கொண்டவர்களின் முக்கிய தொழில்நுட்பவியலாளர் என விசாரணையில் ஈடுபட்டுள்ள சி.ஐ.டி. அதிகாரியொருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அப்துல் லத்தீவ் முகமட் ஜமிலிற்கு ஆதிலே உதவினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஆதில் சஹ்ரான் ஹாசிமையும் வேறு இரண்டு தற்கொலை குண்டுதாரிகளையும் சந்தித்தார் என தெரிவித்துள்ள அதிகாரிகள், அவரது வீட்டை நாங்கள் சோதனையிட்டவேளை அவரது கணினியிலிருந்த அனைத்து ஆவணங்களும் அழிக்கப்பட்டிருந்தன எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆதில் தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு தொடர்பாடல்களில் முக்கிய உதவிகளை வழங்கியுள்ளதுடன் சந்திப்புகள் மற்றும் பயிற்சிகளுக்கான உதவிகளையும் வழங்கியுள்ளார் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் குறித்து நாளுக்கு நாள் அதிர்ச்சி தரும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments