கைகொடுத்த மெத்தியூஸ்!

கைகொடுத்த மெத்தியூஸ்!

இந்தியாவுக்கு எதிரான உலகக் கிண்ண போட்டியில் மெத்தியூஸ் – திரிமன்னவின் நிலையான இணைப்பாட்டத்தினால் இலங்கை அணி 264 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 44 ஆவது போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையே லீட்ஸ் மைதானத்தில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்து ஆடுகளம் நுழைந்தது.

இலங்கை அணியின் முதல் நான்கு விக்கெட்டுக்களும் 55 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டாலும் (திமுத் கருணாரத்ன -10, குசல் பெரேரா – 18, அவிஷ்க பொர்னாண்டோ – 20, குசல் மொண்டீஸ் – 3) 5 ஆவது விக்கெட்டுக்காக மெத்தியூஸ் மற்றும் திரிமான்ன ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.

அதனால் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 20 ஓவரில் 84 ஓட்டத்தையும், 30 ஓவரில் 127 ஓட்டத்தையும் பெற்றது.

இதன் பின்னர் 32 ஆவது ஓவரின் முடிவில் அஞ்சலோ மெத்தியூஸ் அரைசதம் விளாசியதுடன் 34.2 ஆவது ஓவரில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ள இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 ஐ கடந்தது.

மறுமுணையில் மெத்தியூஸுடன் கைகோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த திரிமான்ன 37.5 ஆவது ஓவரில் மொத்தமாக 68 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 53 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (179-5)

தொடர்ந்து களமிறங்கிய தனஞ்சய டிசில்வாவுடன் கைகோர்த்த மெத்தியூஸ் 39 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ள இலங்கை அணி 40 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 200 ஓட்டங்களை தொட்டது.

43.5 ஆவது பந்தில் மெத்தியூஸ் நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ளி சதத்தை பூர்த்தி செய்ய, இலங்கை அணி 47.4 ஓவரில் 250 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் 48.2 ஆவது ஓவரில் மெத்தியூஸ் மொத்தமாக 128 பந்துகளை எதிர்கொண்டு 10 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்கலாக 113 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த திஸர பெரேரா 2 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 264 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் தனஞ்சய டிசில்வா 29 ஓட்டத்துடனும், இசுறு உதான ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்டுக்களையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுக்களையும் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

Facebook Comments