கூட்டு எதிர்க்கட்சியினர் குறித்து உறுதிப்படுத்த முடியாது!

அடுத்த சில தினங்களில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த யார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொள்வார்கள் என்பது குறித்து தன்னால் உறுதிப்படுத்த முடியாது எனவும் எனினும் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய போவதில்லை என்பதை மட்டும் தெளிவாக கூற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நேற்றிரவு நடந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதேவேளை தனது கட்சிக்குள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை.

தேசிய சுதந்திர முன்னணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர அதில் கலந்துக்கொண்டார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஜயந்த சமரவீர, கட்சியை சேர்ந்த சிலர் வழி தவறி சென்றுள்ளதாக கூறியுள்ளார். கட்சியின் பிரதித் தலைவரான வீரகுமார திஸாநாயக்கவை இலக்கு வைத்தே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இங்கு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவய நாணயக்கார, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தாவது உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை கைப்பற்ற கூட்டு எதிர்க்கட்சி தயார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து போட்டியிட தயாரில்லை எனவும் மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதை விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments