கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன?

தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் தமிழர்களுக்காக குரல்கொடுத்த காலங்கள் மலையேறிப் போய்விட்டன.

இப்போது மத்திய ஆட்சியில் மஹிந்தவா – ரணிலா? என்பதைத் தீர்மானிக்கும் அரசியல் செய்வதிலேயே முழுக்கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் ஆயுது பலம் அழிக்கப்பட்டமைக்கும் இறுதி யுத்தத்தின்போது ஏற்பட்ட அவலச் சாவுகளுக்கும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் மட்டுமே காரணம் என்ற ஒரு பதிவின் அடிப்படையிலேயே தமிழ் மக்களை வைத்திருக்க வேண்டும் – என்பதே தமிழ்த் தலைமைகளின் தற்போதைய நிலைப்பாடக இருக்கின்றது.

மஹிந்தவை அரசியல் அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுத்துவிட்டால் போதும் என்பதே தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கான அரசியலா? – என்ற கேள்வி எழுகின்றது.

இந்த புரிதலுக்கான அடிக்கோட்டினை அரசுக்கு எதிராக ஜே.வி.பியின் கொண்டு வந்திருந்த நம்பிக்கை இல்லாப் பிரேரணையின்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் வெளிப்படுத்தியுள்ளார்.

சம்மந்தன் ஐயா அவர்களின் நாடாளுமன்ற உரையில், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தற்போதைய ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து இந்த அரசாங்கம் இல்லாமல் போகுமானால் மீண்டும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஆட்சிபீடமேறும்.

அவ்வாறு மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தில் இருந்தபோதே தமிழ் மக்கள் அழிவுகளையும்இ இழப்புக்களையும் சந்தித்திருந்தார்கள். ஆகவே அத்தகைய ஆட்சியாளரை மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு நாம் இடமளிக்க் முடியாது என்பதற்காகவே ரணில் தலைமையிலான அரசை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு உள்ளது என்றவிதமாக நீண்ட உரையை ஆற்றியிருந்தார்.

தற்போதைய ஆட்சியாளர்கள் தொடர்பாக பல்வேறு அதிகாரத் துஷ்பிரயோகங்கள், மோசடிகள் போன்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் குவிந்து கிடக்கின்றன.

ஏப்ரல் பயங்கரவாத தாக்குதலுக்கு அரசின் அசமந்தப்போக்கே காரணம் என்ற குற்றச்சாட்டுக்களும் நிலையற்ற ஆட்சி நடத்தும் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் இழுபறிகளுமாக நாடு ஒரு ஸ்திரமற்ற நிலையில் பயணித்துக் கொண்டிருக்கையில் நாட்டு மக்கள் தமது எதிர்ப்பை அல்லது கோபத்தை வெளிப்படுத்த தேர்தல் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.

மக்களிடையே அரசாங்கம் குறித்த கொதி நிலை ஒன்று இருக்கின்றது என்பதை அறிந்தே தற்போது தேர்தல் ஒன்றுக்குச் செல்வதற்கு ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றார்கள் என்ற நிலையிலேயே மாகாணசபைகளுக்கான தேர்தல்களைக்கூட நடத்தமால் இழுத்தடிக்கின்றார்கள் என்பதே ஆட்சியாளர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.

இவ்வாறான நிலையிலேயே நாட்டில் ஸ்திரமான ஆட்சி ஒன்றை ஏற்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தை ஒருமித்துக் கலைத்துவிட்டு தேர்தல் ஒன்றுக்குச் செல்வதை ஆட்சியாளர்கள் நினைத்தே பார்க்க முடியாமலுள்ளனர்.

ஜனாதிபதிகூட இவ்வருடமே தேர்தல் ஒன்றுக்குச் செல்வதைத் தவிர்த்துஇ 19ஆவது திருத்தச் சட்டத்தை பயன்படுத்தி அடுத்த வருடம் நடுப்பகுதிவரை ஒரு கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளவும் அதற்கிடையில் போதைவஸ்த்து குற்றவாளிகள், மத்திய வங்கிக் கொள்ளை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என சில விடயங்களுக்காவது உரிய நடவடிக்கைகளை எடுத்து, நாட்டு மக்களிடையே தன்னை ஒரு துணிச்சலான தலைவர் என்பதை ஏற்படுத்த முடியுமா? என்ற திட்டங்களுடன் இருக்கின்றார்.

இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான அரசியல் புறச்சூழலும் ஸ்த்திரமற்ற தற்போதைய ஆட்சியின் நிலையற்ற போக்கும் மஹிந்த தலைமையிலான எதிர்க்கட்சியினரின் அரசியல் செல்வாக்கை நாளாந்தம் பெரும்பான்மையான மக்களிடையே அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கின்றது.

அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக பெரும்பான்மை மக்களின் வாக்குகள் மட்டுமல்லாமல் சிறுபான்மை மக்களின் வாக்குகளையும் எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதற்கான முயற்சிகளை மஹிந்த தரப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்து வருகின்றது.

இந்த நிலையில் மஹிந்தவுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யும் அரசியலானது, சிங்கள மக்களிடையே மஹிந்த பற்றிய அபிமானத்தை வலுப்படுத்துவதாகவே அமைகின்றது.

இலங்கையில் யுத்தம் செய்தது மஹிந்த அரசு மட்டுமல்ல. தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளும் கொடிய யுத்தங்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கவும் பட்டது.

அரை நூற்றாண்டு தமிழர் உரிமைக்கான போராட்டப் பக்கங்களில் மாறி மாறிவந்த இருபிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சி அல்லது சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகளும் பல துரோகங்களையும் கொடுமைகளையும் செய்துள்ளன.

இவ்வாறு தென் இலங்கையின் ஆட்சியாளர்கள் செய்த கொலைகளையும் வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களின் தாயகமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக செய்த சதிகளும் – துரோகங்களும் ஏராளமாகும்.

இந்த வரலாறு சம்மந்தன் ஐயாவிற்கு தெரியாத விடயங்கள் அல்ல. ஆனால் இவற்றையெல்லாம் மறந்து ஐக்கிய தேசியக் கட்சியை மன்னித்து ஏற்றுக்கொள்வதற்கு இன்று சம்மந்தன் ஐயா முற்பட்டிருக்கின்றார்.

தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்கு பரிகாரமாக ஐக்கிய தேசியக் கட்சி என்ன செய்தது? – தீர்வை வழங்கியதா? – சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ததா? – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இதுவரை ஒரு பாரபட்சமற்ற விசாரணையை முன்னெடுத்ததா? – படையினர் வசமுள்ள தமிழர்களின் காணிகளை முன்னின்று விடுவித்துள்ளதா?

எதுவுமில்லை. இருப்பினும் கூட்டமைப்பு ரணில் அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

2015 நல்லாட்சி உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து 2018 ஒக்டோபர் வரையான காலப் பகுதியில் ஆதரவு வழங்கியமையை வேண்டுமானால் நியாயப்படுத்திக் கொள்ள முடியும். ஒரு தேவையும் இருந்தது.

அதாவது, அரசியல் தீர்வை இலக்காக கொண்ட அரசிலயமைப்பு உருவாக்கப் பொறிமுறை நகர்ந்து கொண்டிருந்தது. அதற்கு தென்னிலங்கையில் இருந்து தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அடக்கி வாசித்தார்கள் – தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பை வழங்கினார்கள் எனலாம்.

அல்லது, கடந்து 30 வருட யுத்த காலத்தில் தமிழ் மக்கள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பாக ஏற்படுத்தப்பட்டிருந்த பிரம்மைகளை நீக்கி, தமிழ் மக்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதற்கு தயாராக இருக்கின்றார்கள் – அதற்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றாரகள் என்ற யதார்த்ததை சர்வதேசத்திற்கு புரிய வைக்கும் தந்திரமாகவும் நியாயப்படுத்தலாம்.

ஆனால், இறுதியாக கடந்த ஏப்ரலில் நடைபெற்ற வரவு செலவு திட்டத்திற்கும், கடந்த வாரம் இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணையின் போதும் என்ன அடிப்படையில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தார்கள் என்பதுதான் மக்களின் எரிச்சலாக இருக்கின்றது.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் போினவாதிகளினால் முடுக்கி விடப்பட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் தலைமைகள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

எனினும் முஸ்லிம் அமைச்சர்கள் யாரும் தமக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப பதவிகளை துாக்கியெறிந்து விட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறவில்லை.

மஹிந்தரின் கைகளில் இருந்த பைல்களே முஸ்லிம் அமைச்சர்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசாங்கத்தில் இருப்பதற்கு காரணம் என்று அந்தக் காலப்பகுதில் பரவலாக பேசப்பட்டது.

அதேபோன்றுதான் தற்போது கூட்டமைப்பினர் எக்குத்தப்பாக ரணிலின் கைகளில் அல்லது ரணிலுக்கு விசுவாசமான சர்வதேச சக்திகளின் கைகளில் பிடியை கொடுத்து விட்டார்களோ என்ற சந்தேகம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் தங்களுடைய அனைத்து பேரம் பேசும் வளங்களையும் இழந்துள்ள நிலையில், அரசியல் பலத்தினை வைத்தே எதையாவது நகர்த்த முயற்சிக்க வேண்டும் எனபதுதான் தற்போதைய யதார்த்தமாக இருக்கின்றது.

இந்நிலையில் வடக்கு – கிழக்கு மக்களின் ஒட்டுமொத்த பலமும் 93 ஆண்டு அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்காக பயன்படுத்த வேண்டிய அரசியல் அவலம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று பூச்சாண்டி காட்டப்படுகின்றது.

ஜீன் 30 ஆம் திகதிக்குள் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக அளித்த உறுதிமொழிக்கு அமைவாக ஏப்ரலில் வரவு – செலவு திட்டத்திற்கு ஆதரவளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இப்போது, குறித்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு செய்யப்பட வேண்டிய படிமுறையின் ஒரு பகுதியான, கணக்காளர் நியமிக்கப்பட்டு – தனியான நிதி முகாமைத்துவத்திற்கு அனுமதி கிடைத்துள்ளமைக்காக இப்போது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

அது எந்தளவிற்கு நடைமுறையில் சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஒரு வேளை அது நடைமுறைக்கு வந்தாலும் தரமுயர்த்தல் படிமுறையின் அடுத்த கட்டமான எல்லை நிர்ணயத்திற்காக நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இன்னுமொரு வாக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டுமா என்பதே மக்களின் கேள்வியாக இருக்கின்றது.

ஆக, சொல்லப்படுகின்ற முன்னுக்கு பின்னரான வாக்குறுதிகள் மூலம் ஒன்று மட்டும் புரிகிறது. அதவாது, தமிழ் மக்களின் வாக்குப் பலம் அவர்களுடைய எதிர்காலத்தை வளப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படவில்லை.

தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பிரதிநிதிகளினால் சொல்லப்படுகின்ற வாக்குறுதிகளும் சத்தியமானவை இல்லை – அப்பாவி தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள்!

“மஹிந்தவை ஆட்சிபீடமேற விடக்கூடாது” என்று சம்மந்தன் ஐயா கூறுவதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும், இன்னும் எத்தனை நாட்களுக்கு தடுத்தாட முடியும். ஆகவும் மிஞ்சிப்போனால் இன்னொரு ஆறுமாத காலத்தில் நிச்சயமாக ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்படவே போகின்றது.

அவ்வாறு ஆட்சி மாற்றம் ஏற்படுகின்றபோது அதனை எதிர்கொள்ளும் தெம்பு தம்மிடம் இல்லை என்ற செய்தியையா கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சொல்கின்றது?

Facebook Comments