குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை பதவி நீக்குங்கள்!

குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை பதவி நீக்குங்கள்!

தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களாகக் கூறப்படும் அரசியல் தலைவர்களை தற்காலிகமாக பதிவியிலிருந்து நீக்கி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு விசாரணைகளின் பின்னர் குறித்த தலைவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத பட்சத்தில் மீண்டும் அந்த பதவியை வழங்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக சில அரசியல் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் குற்றச்சாட்டுக்கள் இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை.

உயர் பதவியில் இருக்கும் ஒருவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அவர்களிடம் சுயாதீனமான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படமாட்டாது.

எனவே குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களாகக் கூறப்படும் அரசியல் தலைவர்களை தற்காலிகமாக பதிவியிலிருந்து நீக்கி விசாரணைகளை மேற்கொண்டு, பின்னர் குறித்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத பட்சத்தில் மீண்டும் அந்த பதவியை வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் ஊடாக மக்களின் ஐயத்தை போக்க முடியும்.

இவ்வாறான ஐயப்பாடுகள் மக்கள் மத்தியில் இருப்பதால் அண்மையில் இடம்பெற்றதைப்போன்று வன்செயல்கள் மீண்டும் இடம்பெற வழிவகுக்கும்.

அரசு சட்டத்தை பாராபட்சமாக பாவிக்கிறது எனும் எண்ணம் மக்கள் மனதில் இருக்கும் வரையில் இவ்வாறான வன்செயல்கள் தொர்ந்தும் இடம்பெற வாய்ப்புகள் அதிகம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments