கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு உள்ளகப் பயிற்சி மருத்துவர்கள் நியமனம்.

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு உள்ளகப் பயிற்சி மருத்துவர்கள் நியமனம்.

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு முதற்தடவையாக உள்ள பயிற்சி மருத்துவர்கள் எட்டுப் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

கடந்த வருடம் யூன் மாதம் இலங்கை மருத்துவ சபை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு உள்ளக பயிற்சி மருத்துவர்களை நியமிப்பதற்கான அனுமதியினை சுகாதார அமைச்சுக்கு வழங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பயனாக தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எட்டு உள்ளகப் பயிற்சி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நாளை மறுதினம் ( சனிக்கிழமை) வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் தற்போது யாழ் போதான வைத்தியசாலை மற்றும் வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளில் மட்டுமே இதுவரை காலமும் உள்ளகப் பயிற்சி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வருகின்ற உள்ளகப் பயிற்சி மருத்துவர்களில் எட்டுபேரில் பெரும்பாலானவர்கள் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் என்றும் ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்திலிருந்து வருடந்தோறும் 90 மருத்துவர்கள் மருத்துவக்கல்வியை நிறைவு செய்து உள்ளகப் பயிற்சிக்குச் செல்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ள எட்டு உள்ளகப் பயிற்சி மருத்துவர்களில் அனேகமானவர்கள் வெளிநாட்டு மருத்துவப் பல்கலைகழகங்களில் மருத்துவக் கல்வியைப் பெற்றவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Facebook Comments