எல்பிட்டிய பிரதேச சபை 55% சதவீதமான வாக்குகள் பதிவு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இதுவரை 55 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் அமைதியான சூழலின் கீழ் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது. வாக்காளர்கள் தமது வாக்குகளை மாலை 4 மணி வரை செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. 53,384 பேர் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்த பிரதேச சபைக்காக 28 அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தொகுதி அடிப்படையில் 11 அங்கத்தவர்களும், விகிதாசார வாக்களிப்பிற்கு அமைவாக 17 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு வாக்களிப்பு நிலையத்தில் 5 முதல் 7 தேர்தல் அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையங்களில் தலா 4 பொலிஸார் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதேச சபைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் 800 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக பொலிஸ் நடமாடும் பாதுகாப்பு சேவைகளும் இடம்பெறுகின்றன.

Facebook Comments