உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத்தில் ஒரு இடம் முன்னேறிய இலங்கை.

லிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் இலங்கை 15ஆவது இடத்தைப் பெற்றது.

சிங்கப்பூருக்கு எதிராக இன்று நடைபெற்ற 15ஆவது, 16ஆவது இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் 78 க்கு 57 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை 15ஆவது இடத்தைப் பெற்றது.

16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஏ குழுவில் இடம்பெற்ற இலங்கை, லீக் சுற்றில் ஸிம்பாப்வே, வட அயர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிடம் தோல்வி அடைந்தது.

இதனையடுத்து நான்கு குழுக்களில் கடைசி இடங்களை பெற்ற நான்கு அணிகளுக்கு இடையிலான லீக் சுற்றில் சிங்கப்பூரை 88 க்கு 50 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட இலங்கை மற்றைய இரண்டு போட்டிகளில் சமோஆ, பிஜி ஆகியவற்றிடம் தோல்வி அடைந்தது.

தொடர்ந்து இன்று மீண்டும் சிங்கப்பூரை சந்தித்த இலங்கை 78க்கு 57 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று 15ஆவது இடத்தைப் பெற்றது.

நான்கு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் இலங்கை 16ஆவது இடத்தைப் பெற்றது.

இன்றைய போட்டியில் முழு வீச்சில் விளையாடிய இலங்கை முதல் இரண்டு கால் மணி நேர ஆட்டப் பகுதிகளை முறையே 23 க்கு 15 எனவும் 20 க்கு 13 எனவும் தனதாக்கி இடைவேளையின் போது 43 க்கு 28 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலையிலிருந்தது.

இடைவேளையின் பின்னர் மூன்றாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியை 22 க்கு 12 என தனதாக்கிய இலங்கை கடைசி கால் மணி நேர ஆட்டப் பகுதியில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. திறமையாக விளையாடிய சிங்கப்பூர் 17 க்கு 13 என கடைசி கால் மணி நேர ஆட்டப் பகுதியை தனதாக்கியது. எனினும் இலங்கை 23 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இப் போட்டியில் தர்ஜினி சிவலிங்கம் 85 முயற்சிகளில் 77 கோல்களைப் போட்டார். மற்றைய கோலை ஹசித்தா மெண்டிஸ் போட்டார்.

இவ் வருட உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் தர்ஜினி சிவலிங்கம் ஏழு போட்டிகளில் மொத்தமாக 348 கோல்களைப் போட்டார்.

இதன் மூலம் ஓர் உலகக் கிண்ண வலைபந்தாட்ட அத்தியாயத்தில் அதிக கோல்களைப் போட்ட வீராங்கனை என்ற பெருமையை தர்ஜினி சிவலிங்கம் இப்போதைக்கு பெற்றுக்கொண்டுள்ளார்.

Facebook Comments