இரட்டை ஆட்சிக்குள் கிழிபடும் தமிழ் மரபுரிமைகள்.

இரட்டை ஆட்சிக்குள் கிழிபடும் தமிழ் மரபுரிமைகள்.

அண்மையில் நாவற்குழியில் ஒரு புதிய விகாரை திறக்கப்பட்டது. குறித்த விகாரை திறக்கப்பட்ட தினத்தன்று இரவு பிரதமர் ரணில் யாழ்ப்பாணத்துக்கு வந்தார்.

அவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலகட்டத்திலேயே பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்திருக்கும் தையிட்டிப் பகுதியில் ஒரு தனியாருக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் காணியில் ஓர் அரச மரத்தைச் சுற்றி மகா போதி எனப்படும் ஒரு கட்டுமானத்தை படைத்தரப்பு திறந்து வைத்திருக்கிறது.

பதவி விலகிச் செல்லும் மாவட்ட கட்டளைத் தளபதி அவசர அவசரமாக அதை திறந்து வைத்து விட்டு சென்றிருக்கிறார்.

அடுத்த நாள் திங்கட்கிழமை ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் ஒரு புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். திறக்கப்பட்ட விகாரைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லைப் போலத் தோன்றும்.

ஆனால் கடந்த பொதுத் தேர்தலின் போது அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆயிரம் விகாரைகளை திறப்பேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியின் பிரகாரமே நாவற்குழியில் ஒரு விகாரை திறக்கப்பட்டிருக்கிறது.

நாவற்குழியில் சிறு தொகை சிங்கள மக்கள் சில ஆண்டுகளுக்கு முன் குடியமர்த்தப்பட்டார்கள். அச்சிறிய தொகை சிங்கள மக்களின் வழிபாட்டு தேவைக்காகவே புத்த விகாரை திறக்கப்பட்டிருக்கிறது.

ரணிலைக் கேட்டால் நான் திறக்கவில்லை என்று கூறுவார். ஆனால் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அமைச்சுக்கள்தான் அந்த விகாரையை கட்டியெழுப்பின.

இப்படித்தான் கன்னியா வெந்நீரூற்று பிரதேசத்தில் ஏற்கனவே காணப்பட்ட ஒரு பிள்ளையார் கோவில் இருந்த இடத்தில் ஒரு புத்த விகாரையை கட்டும் முயற்சிகள் தொடங்கப்பட்ட பொழுது அதை தடுக்குமாறு மனோ கணேசனும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரணிலிடம் கேட்டார்கள்.

கடந்த வாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது ரணிலை ஆதரிக்கும் முடிவை எடுத்த கூட்டமைப்பு கன்னியா விவகாரத்தையும் அங்கே சுட்டிக்காட்டியிருக்கிறது.

அதன் போது ரணில் திருகோணமலை பிரதேச செயலருக்கு விகாரை கட்டும் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டதாக சுமந்திரன் காலைக் கதிரின் ஆசிரியர் வித்தியாதரனுக்கு கூறியிருக்கிறார்.

ஆனால் அங்கே விகாரையைக் கட்டும் தரப்புகள் ஜனாதிபதியின் செயலர் அனுப்பிய அனுமதி கடிதத்தை காட்டியிருக்கிறார்கள். இது தொடர்பாக மனோ கணேசன் ஜனாதிபதியிடம் கேட்ட பொழுது அவர் அப்படி ஒரு உத்தரவைப் பிறப்பிக்கவில்லை என்று மறுத்திருக்கிறார்.

ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதிக்குள் நுழைய முற்பட்ட தமிழ் பொதுமக்களை நூற்றுக்கணக்கான படைவீரர்களும் பொலிஸ்காரர்களும் தடுத்து நிறுத்தி இருக்கிறாரகள்.

போலீஸ்காரர்கள் நீதிமன்றத்திடம் இருந்து தடை உத்தரவையும் வாங்கிக் கொண்டு வந்து காட்டியிருக்கிறார்கள்.

அங்கே உஷார் நிலையில் துப்பாக்கிகளைத் தயார் நிலையில் வைத்தபடி நின்றிருந்த நூற்றுக்கணக்கான படைவீரர்கள் தமது முகங்களை மூடி கறுப்பு துணிகளை கட்டியிருந்தார்கள். இலங்கைத்தீவின் முப்படைகளுக்கும் பொறுப்பு ஜனாதிபதிதான். சட்டம் ஒழுங்கு போன்றவற்றுக்குப் பொறுப்பான அமைச்சரும் அவர்தான்.

ஜனாதிபதிக்கு தெரியாமல் அப்படி நூற்றுக்கணக்கான போலீசாரும் படைத்தரப்பும் அங்கு வந்திருக்க முடியாது. எனவே ஊர்வலம் போன பக்தர்களை தடுத்து நிறுத்தியது என்பது ஜனாதிபதிக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட ஒரு முடிவு அல்ல.

அப்படியானால் கன்னியா வெந்நீர் ஊற்றுப் பிள்ளையார் கோவில் விவகாரத்தில் ரணிலின் நிலைப்பாடு என்ன? – மைத்திரியின் நிலைப்பாடு என்ன?

கடந்த ஒக்டோபர் மாத ஆட்சி குழப்பத்தின் பின்னிருந்து பிரதமரும் அரச தலைவரும் எதிரும் புதிருமாக காணப்படுகிறார்கள். நாட்டில் இப்பொழுது நடப்பது ஒருவித இரட்டை ஆட்சியே. ரணில் எடுக்கும் முடிவுகளை மைத்திரி ஏற்றுக் கொள்வதில்லை. மைத்திரி எடுக்கும் முடிவுகளை ரணில் மதிப்பதில்லை.

ரணில் நியமித்த நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் முன்னால் தான் தோன்றப் போவதில்லை என்று மைத்திரி கூறிவருகிறார். ஆனால் அப்படி தோன்ற கூடாது என்று கூறி அவரால் தடுக்கப்பட்ட படைத்தரப்பு பிரதானிகள் புலனாய்வு துறைப் பிரதானிகள் பலரும் அவருடைய உத்தரவையும் மீறி தெரிவுக்குழுவின் முன் சாட்சியம் அளித்து விட்டார்கள்.

அவருடைய கட்சி பிரதானிகளும் சாட்சியம் அளித்து விட்டார்கள். நாடாளுமன்ற சிறப்பு தெரிவுக்குழு எனப்படுவது நிறைவேற்று அதிகாரத்திற்கும் சட்டவாக்க மன்றத்துக்கும் இடையிலான மோதலை பிரதிபலிக்கிறது.

அது மட்டும் இல்லை, நிறைவேற்று அதிகாரத்தை விட சட்டவாக்க மன்றத்துக்கு அதிகாரம் அதிகம் உண்டு என்பதனையும் அது நிரூபித்து வருகிறது. தெரிவுக் குழுவின் மூலம் மைத்திரியை ஒரு பொறிக்குள் சிக்க வைக்க ரணில் முயற்சித்து வருகிறார்.

அதேசமயம் ரணிலையும் அவருடைய கூட்டாளிகளையும் எப்படி முடக்கலாம் என்று மைத்திரி சிந்தித்துச் செயல் படுகிறார். தானே சேர்ந்து உருவாக்கிய 19ஆவது திருத்தத்தை இப்பொழுது ஒரு சாபக்கேடு என்று அவர் வர்ணிக்கிறார். அது மட்டுமல்ல ரணிலை பாதுகாக்கும் கூட்டமைப்பை அவர் பழிவாங்கி வருகிறார்.

கன்னியா விவகாரம் – செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயில் விவகாரம், நாவற்குழி விகாரை விவகாரம் போன்றவற்றில் கூட்டமைப்புக்கு நோகாத விதத்தில் ரணில் சில முடிவுகளை எடுத்தாலும் மைத்திரி அவற்றை மேவி தன்னுடைய அதிகாரத்தைப் பிரயோகித்து வருகிறார்.

இவ்விவகாரங்களில் மட்டுமல்ல இவற்றுக்கு முன் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் விவகாரத்திலும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் விவகாரத்திலும் கூட்டமைப்புக்கு எதிராகவே மைத்திரியின் நகர்வுகள் காணப்பட்டன.

இவ்வாறு ரணிலின் மறைமுக ஆதரவோடு கூட்டமைப்பு முன்னெடுக்கும் சில நகர்வுகளை மைத்திரி முறியடித்த வருகிறார். இதன் மூலம் அவர் ஒருபுறம் ரணிலுக்கு எதிராக செயல்படுகிறார். இன்னொருபுறம் கூட்டமைப்பை அதன் வாக்காளர்களோடு மோத விடுகிறார். எதிர்காலத்தில் இது கூட்டமைப்பின் வாக்கு வங்கியை சேதமாக்கக் கூடியது.

தமிழ் வாக்காளர்கள் கூட்டமைப்பை நோக்கி கேட்பார்கள் “நீங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கிறீர்கள். ஆனால் அரசாங்கத்தின் உபகரணங்களான திணைக்களங்கள் கன்னியாவை ஆக்கிரமிக்கின்றன. செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலை ஆக்கிரமிக்கின்றன. நாவற்குழியில் புத்தவிகாரை கட்டுகின்றன. காங்கேசன்துறையில் மகாபோதி ஒன்றை கட்டுகின்றன.

மாணவர்களைப் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் முடக்குகின்றன. பல்கலைக்கழக துணைவேந்தரை காரணம் சொல்லாமல் பதவிநீக்கம் செய்கின்றன. கன்னியாவில் தேவாரம் பாடிக் கொண்டு வந்த பக்தர்களை துப்பாக்கிகளோடு தடுத்து நிறுத்துகின்றன. இதையெல்லாம் தடுக்க முடியாத நீங்கள் அரசாங்கத்துக்கும் முண்டு கொடுக்கிறீர்கள்.

இப்பொழுதும் ஓர் அரசியல் கைதி உண்ணாவிரதம் இருக்கிறார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீர்வின்றி போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தீர்வைப் பெற்றுத்தர முடியாத நீங்கள் ஏன் தொடர்ந்தும் அரசாங்கத்தை பாதுகாக்கிறீர்கள்?” – என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் முடியுமா?

மஹிந்த விடுகிறார் இல்லை, மைத்திரி விடுகிறார் இல்லை என்று கூறினால் ரணில் விடுகிறார் என்று வந்துவிடும். அதாவது ரணில் நல்லவர் என்று வந்துவிடும். ஆனால் அப்படியும் சொல்வதற்கு சில கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாரில்லை. அவர்கள் ரணிலை நரி என்று அழைக்கிறார்கள்.

இப்படியாக கூட்டமைப்பையும் அதன் வாக்காளர்களையும் மோதவிடும் ஓர் உத்தியை மைத்திரி முன்னெடுத்து வருகிறார். இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் வரக்கூடிய அரச தலைவருக்கான தேர்தலின் போது தமிழ் மக்களின் வாக்குகளின் மீது கூட்டமைப்பு செல்வாக்குச் செலுத்தக்கூடிய செல்வாக்கின் அளவைக் குறைக்கலாம் என்று மைத்திரியும் மஹிந்தவும் சிந்திக்கிறார்களா?

அடுத்த டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் அரச தலைவருக்கான தேர்தலே நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கப் போகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வும் முற்பட பல விவகாரங்களை அதுதான் தீர்மானிக்கும். அப்படிப் பார்த்தால் வயோதிபரான சம்பந்தரின் அரசியற் செயல் வழியின் வெற்றிகளையும் தோல்விகளையும் அந்த தேர்தல்தான் தீர்மானிக்கப் போகிறது. அதைக் குறிவைத்து மைத்திரியும் மஹிந்தவும் இயங்கத் தொடங்கி விட்டார்கள்.

இவ்வாறு மைத்திரியும் ரணிலும் ஆளுக்காள் எதிரும் புதிருமாக அரசியல் செய்ய அதனால் அதிகம் கிழிபடுவது தமிழ் மக்களே. ஏனெனில் இந்த இரட்டை ஆட்சிக்குள் தமிழ் மக்களின் மரபுரிமைச் சின்னங்கள் பல அபகரிக்கப்பட்டுவிட்டன.

ரணிலைப் பாதுகாக்கும் கூட்டமைப்பால் அவற்றை காப்பாற்ற முடியவில்லை. நாட்டின் ஜனநாயகத்தின் இதயத்தைப் பாதுகாத்து நீதிமன்றத்தில் ரணிலுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்த தமிழ் அப்புக்காத்துமார்களினால் தமிழ் மக்களின் மரபுரிமைகளை பாதுகாக்க முடியவில்லை.

Facebook Comments