அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது!

அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தினால் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த அரசாங்கத்திற்கு தற்போது நாடாளுமன்றில் போதிய பெரும்பான்மை இல்லை. அதனால் அவர்களால் கொண்டுவரப்படும் வரவு செலவுத் திட்டத்தினை நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்படும்.

அரசாங்கத்திடம் இருந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் இல்லாமலாக்கப்பட்டு தற்போது சாதாரண பெரும்பான்மையும் கூட இல்லாமலாகியுள்ளது. இதனால் வரவு செலவுத் திட்டத்தினை நிறைவேற்றுவது இவர்களுக்குப் பாரிய சவாலாக மாறியுள்ளது.

அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. 113 உறுப்பினர்கள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றபோதும், 103 பேரே இருக்கின்றனர்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் யோசனையை விரைவாக கொண்டு வந்தது. ஆனால் அதனை தற்போது பிற்போட்டுள்ளனர்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாம் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் அதனை விரைவாக சமர்ப்பிப்பதாக கூறினர்.

ஆனாலும் வரவு செலவுத் திட்டத்தை எப்படியாவது நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகரிப்போம் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியிருப்பது நகைப்பிற்குரியது” என விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.

Facebook Comments